Old Age Solutions (Tamil)

முகப்பு >>> பொழுதுபோக்கு & கேளிக்கை >>> முதியோருக்கான வெளிப்புற நடவடிக்கைகள்
Resize Text -   

நடை

எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த உடற்பயிற்சி இது என்று சொல்லலாம். சுத்தமான காற்றைச் சுவாசிப்பதும் மரங்களைப் பார்ப்பதும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். மன நிலையையும் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். மற்றவர்களையும் பார்க்க இது ஒரு வாய்ப்பு. உங்கள் பாதங்களுக்குப் பொருத்தமான, பாதங்களுக்குக் களைப்பு ஏற்படுத்தாத சௌகரியமான ஷூவை அணிந்து கொள்ள வேண்டும். ஆதரவோடு தான் நடக்க வேண்டும் என்னும் நிலையில் இருப்பவர்கள், எதையாவது பிடித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள் கையில் ஒரு கம்பை வைத்துக்கொள்வது நல்லது. நீண்ட தூரம் நடக்க விரும்புபவர்கள் அல்லது ஒரு பூங்காவிற்கோ, தோட்டத்திற்கோ சென்று அமர விரும்புபவர்கள், கையில் சின்ன தண்ணீர் புட்டியை எடுத்துச் செல்வது நல்லது. தாகம் எடுக்கும் போது உதவும். சக்கர நாற்காலியில் இருப்பவர்களாக இருந்தால், உடல் சிரமம் காரணமாக பூங்காவிற்கோ, தோட்டத்திற்கோ செல்வது முடியாத காரியமாக இருக்கும். அவர்களுக்கு இருக்கும் வரப் பிரசாதம் – மால்கள். ஒரு உதவியாளரின் உதவியுடன் இந்த மால்களுக்கு சக்கர நாற்காலியிலேயே செல்ல முடியும். சக்கர நாற்காலியிலேயே இருப்பவர்களுக்கு இம்மாதிரி தினம்தோறும் செல்வது சாத்தியமில்லை. அதனால், கண்ணாடி வழியாக பொருள்களைப் பார்ப்பது, நண்பர்களுடனோ, தெரிந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் சென்று ஒரு காபி குடிப்பது ஆகியவற்றைத் திட்டமிட்டு இந்த மால்களுக்குச் செல்லலாம். உண்மையில் மால்களைத் தவிர, உங்களுக்குப் பிடித்த வேறு இடங்களுக்கும் செல்லலாம். உதாரணமாக, ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்கள் துணைவருடனோ, தனியாகவோ செல்லலாம். பிறகு மதிய உணவிற்காகவோ, காபி குடிக்கவோ வேறு எங்காவது செல்லலாம். நாளிதழ்களில் வெளிவரும் “இன்றைய நிகழ்ச்சிகள்” பத்தியைப் பார்த்து எங்கே செல்வது என்பதைத் திட்டமிடலாம். அந்தப் பத்தியிலிருந்து, நமக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் அடுத்து எங்கே நடக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு நம் நாளையோ, வாரத்தையோ திட்டமிடலாம்.

பறவைகளைக் கவனித்தல்

இயற்கையை விரும்பக்கூடிய ஆனால், உடல் நிலை காரணமாகவோ, போக்குவரத்து இன்மையாலோ, துணைவர்கள் இல்லாததாலோ, வேறு காரணங்களாலோ வயல்வெளிகளிலோ, காட்டுப் பகுதிகளுக்குள்ளோ நடந்து செல்ல முடியாதவர்களுக்கு சிறந்த மாற்று இந்த பறவைகளைக் கவனித்தல் தான். இதற்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. இந்த நடவடிக்கையை உங்களுக்கு அருகிலிருக்கும் பூங்காவிலிருந்தே துவங்கலாம். இந்தப் பொழுதுபோக்கு பற்றி நீங்கள் தீவிரமாக யோசித்தால், மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் யோசனைகளையும் http://www.birding.in/ என்ற இணைய தளத்திலிருந்து பெறலாம்.

புகைப்படக் கலை

மேலே குறிப்பிட்ட இரண்டு நடவடிக்கைகளுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ ஈடுபடக்கூடிய ஒரு பொழுதுபோக்கு புகைப்படக்கலை. இதற்குக் கேமரா மட்டும் இருந்தால் போதுமானது. ஒரு டிஜிட்டல் கேமராவை வைத்துக் கொண்டு உங்களுக்குப் பிடித்ததையெல்லாம் படமெடுத்து அதை உங்கள் கேமராவிலோ, கம்ப்யூட்டரிலோ சேகரித்து வைக்கலாம். இயற்கை, வாகனங்கள், மனிதர்கள் அல்லது உங்கள் மனதிற்குப் பிடித்த ஏதாவது ஒன்று என ஒரு கருத்தை மையப்படுத்திப் புகைப்படம் எடுக்கலாம். பிறகு இவற்றை மொத்தமாகச் சேர்த்து, கோப்புகளாக உங்கள் கம்ப்யூட்டரில் சேகரித்து வைக்கலாம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால், மேலும் பல தகவல்களை http://www.asianphotographyindia.com/default.htm , என்ற இணைய தளத்திலிருந்து பெறலாம். சில அடிப்படையான மற்றும் டிஜிட்டல் புகைப்பட நுட்பங்கள், பல்வேறு நகரங்களின் புகைப்பட கேலரிகள், மேலும் பல தகவல்களை http://www.photolinks.com/resources.html? வலை தளத்திலிருந்து பெறலாம்.

தோட்டம் போடுதல்

இயற்கையுடன் உங்களை இணைக்கும் மிகவும் அர்த்தமுள்ள நடவடிக்கை இது. உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு சிறிய அளவு நிலம் அல்லது உங்கள் பால்கனியில் வைத்துக்கொள்வதற்கேற்ப சில தொட்டிகள் மற்றும் சில வண்ணமயமான கருவிகள். ஒரு தோட்டத்தை உருவாக்கவும் சில காய்கறிச் செடிகளை வளர்க்கவும் http://www.seasonsindia.com/lifestyle/gardening_sea.htm  http://www.cityfarmer.org/kitchenIndia.html. போன்ற இணைய தளங்களும் சில புத்தகங்களும் உங்களுக்கு உதவும். ஒரு எச்சரிக்கை: வெளியே வெப்பமாக இருக்கும்போது தோட்ட வேலை செய்யச் செல்லாதீர்கள். காலை நேரங்களிலோ, மாலையிலோ இதைச் செய்யுங்கள். மண் தொட்டிகள் போன்ற கனமான எந்தப் பொருளையும் தூக்காமல் இருப்பது மிகவும் முக்கியம். இதனால், முதுகுக்கு சிரமம் ஏற்படும். உங்களுக்கு முதுகு வலி பிரச்னை இருந்தால், தொட்டிகளை உயரமான இடத்தில் வைக்கலாம். இதனால், குனிய வேண்டி வராது.

விளையாட்டுகள்

உங்கள் மருத்துவரும் உடல் நலமும் அனுமதித்தால் விளையாட்டுகள் சிறந்த உடற்பயிற்சியாகவும் பொழுதுபோக்கு நடவடிக்கையாகவும் அமையும். கால்ஃப், பேட்மின்டன், டென்னிஸ், நீச்சல் அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு எந்த விளையாட்டையும் விளையாடலாம். மற்றவர்களைச் சந்திக்க இது ஒரு சிறந்த வாய்ப்பும்கூட.

உடற்பயிற்சி

எல்லா வயதினருக்கும் எல்லா மருத்துவர்களும் உடல் நல நிபுணர்களும் பரிந்துரைக்கும் நடவடிக்கை இது. வயதானவர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. தற்போது வெவ்வேறு விதமான உடற்பயிற்சிகள் புழக்கத்தில் இருக்கின்றன. இவை உடல் மற்றும் மனதின் நலனுக்கு உதவுவதோடு சிறந்த பொழுதுபோக்காகவும் அமைகின்றன. இவற்றில் சில.

யோகா

யோகா என்பது பிரபஞ்சம் தழுவிய பிரக்ஞையுடன் இரண்டறக் கலப்பது என்கிறது விக்கிபீடியா. அதே சமயம், உடல் மற்றும் மனநலனைப் பேணவும் யோகா உதவுகிறது. புரொஃபஷனலான ஒரு யோகா குருவின் டிவி தொடரிலிருந்து யோகாவின் நன்மைகள், எப்படிச் செய்வது போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். யோகாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள http://www.yogapoint.com/index.htm இணைய தளத்தைப் பார்க்கவும். ஆனால், சரியான முறையில் யோகாசனங்களை நல்ல குருவிடமிருந்து தான் கற்றுக்கொள்ள முடியும்.http://www.yoga-centers-directory.net/india/india.htm என்ற இந்த இணைய தளம் இந்தியாவிலும் உலகெங்கிலும் பல்வேறு நகரங்களில் இருக்கும் யோகா மையங்களின் முகவரிகளைத் தருகிறது.

தாய் - சீ

சீனப் போர்க் கலையான தாய் – சீ தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக வயதானவர்கள், இதன் “மென்மையான திறன்” காரணமாகவும் உடல் நலம் மற்றும் வாழ்நாளை நீட்டிக்கும் தன்மை காரணமாகவும் இதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். மெதுவாக, மென்மையான வகையில் நீண்ட நேரம் உடலை இயக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலிருந்து நிறுத்தாமல் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். யோகாவைப் போலவே தாய் – சீயும். எலும்புத் தேய்வு, நீரிழிவு, ஆஸ்டோஃபொரோஸிஸ் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இதை பயிற்சி செய்வது நல்லது. http://www.taichinetwork.org/searchpages/Asia-India-Tai-Chi-teachers.html. என்ற இந்த முகவரியிலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருக்கும் தாய் – சீ ஆசிரியர்களின் முகவரிகளைப் பெற முடியும்.

வாழும் கலை

இந்த கிரகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தையும் உயர்த்துவதும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அழுத்தமில்லாத மனதைத் தருவதும் ஆரோக்கியமான உடலைத் தருவதும் அவர்களுடைய தனிப்பட்ட, ஆன்மீக வளர்ச்சிக்கான திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்பைத் தருவதும் தான் வாழும் கலை நடவடிக்கைகளின் நோக்கம் என்கிறது இதற்கென அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் http://www.artofliving.org/AboutUs/tabid/60/Default.aspx , இணைய தளம். ஆர்ட் ஆஃப் லிவிங் ஃபவுண்டேஷன் 1981ல் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரால் துவங்கப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். ரவிஷங்கரே கண்டு பிடித்திருக்கும் சில நுட்பங்களை நாம் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க முடியும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் வளர்த்தெடுக்க இவை உதவும். உலகிற்கு இவர் அளித்த மிகச் சிறந்த கொடை சுதர்ஸன கிரியா என்பதாகும். மிகச் சக்தி வாயந்த இந்த மூச்சுப் பயிற்சியைக் கடைப்பிடிப்பதன் மூலம் உடல், மனம், உணர்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. சமூகத்தின் நலனையும் பேணுகிறது. இந்தியாவிலிருக்கும் வாழும் கலை மையங்களின் பட்டியலை http://www.artofliving.org/Centers/tabid/66/Default.aspx இணைய தளத்திலிருந்து பெறலாம்.
(http://www.artofliving.org/Centers/tabid/66/Default.aspx)
வெளிப்புறத்தில் நீங்கள் ஈடுபடக்கூடிய நடவடிக்கைகளின் பட்டியல் இத்துடன் முடிந்து விடவில்லை. உங்கள் கற்பனையைப் பயன்படுத்தி உங்கள் நேரத்தைச் செலவழிக்கவும் ஒரு காரியத்தை முடித்த திருப்தியைப் பெறவும் உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் செய்யுங்கள். நீங்கள் எதாவது நடவடிக்கையில் ஈடுபட விரும்பினால், அதற்கென்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டால் அதிக பலனைப் பெற முடியும். உதாரணமாக, நடைப் பயிற்சி. உங்கள் நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை “நடப்பதற்கான நேரம்” என்று ஒதுக்கிவிட்டால் மனதளவில் நீங்கள் அதற்குத் தயாராக இருப்பீர்கள். உடலும் அதற்கேற்ப தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும். மூளை ஒரு ஒழுங்கிற்கு வரும். நீங்கள் அந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள்.

டாக்டர் சுபா சொனேஜா