|
|
Resize Text - பாதப் பாரமரிப்புமுதிய வயதில் பாதத்தில் பிரச்சினை வருவது பொதுவான ஒன்று. பாதத்துக்குப் பொருத்தமற்ற ஷூ அணிதல், சீரான நடை இல்லாதிருத்தல், சீராக வெட்டப்படாத கால் நகங்கள் ஆகியவற்றாலும் பாதங்களில் தேய்மானம் ஏற்படுகிறது. சில நேரங்களில் நோய் காரணமாகப் பாதிப்பு ஏற்படுகிறது. உங்கள் பாதத்தை முறையாகப் பரிசோதித்தால் பாதப் பிரச்னைகளைத் தடுக்க முடியும். அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமும் பாத சுகாதார நிபுணரிடமும் பாதத்தை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். குளிர்காலங்களில் வெறும் காலுடன் நடத்தல், ஷூ போடுவதால் ஏற்படும் அழுத்தம், நீண்ட நேரத்துக்கு ஒரே இடத்தில் ஓய்வெடுத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல், புகைபிடித்தல் ஆகியவை பாதத்துக்குச் செல்லும் ரத்த அளவைக் குறைக்கின்றன. பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது மற்றும் இதர வகை உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம். பாதத்துக்கு மசாஜ் செய்தல் மற்றும் மெல்லிய சூட்டில் பாதத்தைக் கழுவுதல் ஆகியவை பாதத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கால்களுக்குப் பொருத்தமான, வசதியான ஷூக்கள் அணிவது பெரும்பாலான பாதப் பிரச்னைகளைத் தடுக்கும். ஷூக்களின் மேற்பாகம் மெல்லியதாக, நெகுழும் தன்மை கொண்டதாக, உங்கள் பாதம் வசதியாகப் பொருந்திக்கொள்ள இடமளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். தோலினால் செய்யப்பட்ட ஷூக்கள் பாதத்துக்குள் காற்றுப்புகும் வசதியை அளிக்கும். தோல் ஷூக்கள் அலர்ஜியைக் குறைக்கும். பாதத்தை உறுதியாக வைத்து நடக்க உதவ வேண்டும். வழுக்கக் கூடாது. கெட்டியான தோல், கடினமான தரையில் நடக்கும்போது பாதங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். உயர்ந்த குதிகால் உள்ல பாதணிகளைத் தவிர்க்க வேண்டும். ஈரமான, இருட்டான, சூடான சூழல்களில் பாதத்தில் நீண்ட நேரம் இருக்கும் போது பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றால் பாதத்தில் சிவப்பு நிறமோ, கொப்புளங்களோ, தோல் உரிவதோ ஏற்படக்கூடும். இதற்கு முறையாகச் சிகிச்சை அளிக்காவிட்டால், இந்த தொற்று நீண்ட நாட்களுக்கு நீடித்து குணப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிடும். எனவே தொற்று ஏற்படாமல் பாதத்தைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக விரல்களுக்கு இடையேயான பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தபோதெல்லாம் சூரிய ஒளி அல்லது காற்று பாதத்தில் படும்படி வைக்க வேண்டும். பாதத்தில் பூஞ்சை தொற்று ஏற்படக்கூடிய நிலை உங்களுக்கு இருந்தால் பூஞ்சைத் தொற்றைத் தடுக்கக்கூடிய பவுடரைத் தடவுங்கள். உலர்ந்த சருமம் சில நேரம் அரிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். கால் மற்றும் பாதத்தில் களிம்புகளை தேய்க்கலாம் மற்றும் மெல்லிய சோப் வகைகளைப் பயன்படுத்திப் பாதத்தைக் கழுவலாம். ஷூக்களின் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக பாதத்தின் முன்பகுதியில் கால் ஆணி மற்றும் காய்ப்பு ஏற்படலாம். இதனால் பாதத்தில் வலி ஏற்படும். கால் ஆணியை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மாறாக சுய சிகிச்சை செய்துகொள்வது தீங்கு விளைவிக்கும். குறிப்பாக நீங்கள் சர்க்கரை நோயாளியாகவோ அல்லது குறைந்த ரத்த ஓட்டம் உள்ளவராகவோ இருந்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே உங்களின் மருத்துவரை ஆலோசிப்பதுதான் சரியான வழி. வைரஸ் தொற்றின் விளைவாக பாதத்தில் தோல் பரு மற்றும் தோலில் வளர்ச்சி ஏற்படுகின்றன. இவை எப்போதாவது வலி ஏற்படுத்தலாம். சிகிச்சை அளிக்காவிட்டால் இவை மேலும் பரவக்கூடும். அறுவை சிகிச்சை அல்லது எரிச்சலை அடக்கும் சிகிச்சைகள் இதற்கு உதவக்கூடும். காலின் பெருவிரலில் வளரும் நகத்தால் தோலில் துளை ஏற்படும். அடிக்கடி நகத்தை வெட்டாவிட்டால் பாதிப்பு ஏற்படும். தோல்பகுதியை வெட்டுவதன் மூலம் அகற்ற முடியும். எந்த விதத் தொற்றும் ஏற்படாமல் அந்த பகுதியில் குணப்படுத்த வேண்டும். கால் விரலுக்கு மேலே வந்த உடன் நகத்தைக் கத்தரிப்பதன் மூலம் இந்தக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். அதிக எடை உடையவர்கள், சரியாகப் பொருந்தாத ஷூ உபயோகித்தல், நீண்ட நேரமாக நின்று கொண்டே இருத்தல் ஆகியவற்றால் பாதத்தின் எலும்புகளில் துருத்திகள், பாதத்தின் முன்பகுதியில் வளர்ச்சி ஏற்படும். பாதத்திற்கு முறையான பாதுகாப்பு, ஹீல் பேட், ஹீல் கப் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் அல்லது ஊசி மருந்து போட வேண்டும். சில நேரங்களில் அறுவை சிகிச்சையும் தேவைப்படும். சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதத்தில் புண் மற்றும் தொற்று ஏற்படலாம். எனவே இவர்கள் அதிக சூடு மற்றும் அதிக குளிர்ச்சியான தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். தங்கள் பாதங்களைச் சுத்தமாகவும், ஈரம் இன்றியும் வைத்திருக்க வேண்டும். பாதத்தில் காயமோ அல்லது தொற்றோ ஏற்பட்டிருக்கிறதா என அடிக்கடி பார்த்துக்கொள்ல வேண்டும். கூர்மையான பொருள்களின் மீது அல்லது கூர்மையான தரைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். |